சட்டவிரோத சூதாட்ட செயலி 1xBet–ஐ புரோமோஷன் செய்ததாகும் குற்றச்சாட்டின் பேரில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் இன்று டெல்லியில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.
இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கி, பார்ட்–டைம் ஸ்பின் பந்துவீச்சிலும் திறமையைக் காட்டியவர் சுரேஷ் ரெய்னா. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நீண்டகாலம் விளையாடிய அவர், தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தனியார் தொழில் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக, 1xBet எனும் சூதாட்ட செயலியின் பிராண்ட் தூதராக ரெய்னா இருந்ததாகவும், இதன் மூலம் சட்டத்துக்கு முரணான பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டம் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜூன் மாதம் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோரிடம் இதே வழக்கில் ED விசாரணை நடத்தியது. தற்போது, ரெய்னாவிடம் விசாரணை நடைபெறுகிறது.
சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான இந்த விசாரணை, விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலர்களிடமும் விரிவடைந்துள்ளது. தெலுங்கானா போலீசார், 25 நடிகர்–நடிகைகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த நிலையில், பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்டோர் ஏற்கனவே விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். ராணா டகுபதியிடம் நேற்று ஹைதராபாத்தில் ED விசாரணை நடத்தியது.
மேலும், நடிகைகள் மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், அனன்யா நாகல்லா, சின்னத்திரை நடிகை ஸ்ரீமுகி உள்ளிட்டோரும் அமலாக்கத்துறையின் விசாரணைப் பட்டியலில் உள்ளனர்.















