சென்னை : 1980களில் தமிழ் திரைப்படங்களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்று காலை சோதனையினை மேற்கொண்டனர்.
பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருணா, பின்னர் சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, நாடோடி ராஜா, டார்லிங் டார்லிங் டார்லிங், முதல் மரியாதை, கரிமேடு கருவாயன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது, உள்கட்டமைப்பு மற்றும் அலங்காரப் பணிகளுக்கான ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சென்னையின் நீலாங்கரையில் தனது கணவர் மோகன் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் கணவர் மோகன் நடத்தும் நிறுவனத்தில் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் நடந்ததாக வந்த புகாரின் பேரில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், மோகன், அருணா மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.
சோதனை முடிவில் எதாவது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதா என்பதற்கான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.