சென்னை:
அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இதன் பகுதியாக, சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்.எல்.ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், அறை பூட்டப்பட்டிருந்ததால் அதிகாரிகள் நீண்ட நேரம் வெளியில் காத்திருந்தனர். பின்னர் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுடன் ஆலோசனை நடத்தி, பூட்டை உடைத்து சோதனை நடத்த தீர்மானித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக, சீலப்பாடியில் செந்தில்குமார் வீடு, வள்ளலார் நகரில் பெரியசாமியின் மகள் இந்திராணி வீடு, மேலும் பசுமைவழிச்சாலையில் அமைந்துள்ள அமைச்சர் பெரியசாமியின் இல்லம் உட்பட மொத்தம் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
சுமார் 15 அதிகாரிகள், 3 வாகனங்களில் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், பாதுகாப்பு ஏற்பாடாக மத்திய பாதுகாப்புப் படையின் 30 வீரர்கள் துப்பாக்கியுடன் குவிக்கப்பட்டுள்ளனர்.
2006 முதல் 2011 வரை வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த காலத்தில், ஐ.பெரியசாமி, ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு துறை நிலம் ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு, சட்டவிரோத வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக அமைச்சர் பெரியசாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதையொட்டி, தற்போது அமலாக்கத்துறை தீவிர சோதனைகள் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.