சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பு தொடர்பான விவாதங்களுக்கு தெளிவுக் கொடுக்க, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் செல்வப்பெருந்தகை, சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டணி மாற்றம்? கடந்த சில வாரங்களாக எழுந்த குழப்பம்
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்டவை உள்ளன. அதேசமயம், காங்கிரஸ் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற செய்திகள் சில வாரங்களாகவே அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.
கரூர் நிகழ்வுக்குப் பிறகு விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியதாகவும், பின்னர் மீண்டும் தொலைபேசி உரையாடல் நடந்ததாகவும் தகவல்கள் பரவின. மேலும், ராகுல் காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு காங்கிரஸ் நிர்வாகி பனையூரில் விஜயை நேரில் சந்தித்து பேசியதாகவும் கூறப்பட்டதால், கூட்டணி மாற்றம் குறித்த ஊகங்கள் அதிகரித்தன.
பீகாரில் கட்சி சந்தித்த தோல்வி காரணமாக, வரவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் கூடுதல் இடங்களைப் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சிப் பங்கையும் கோர சில காங்கிரஸ் தலைவர்கள் முன்வந்துள்ளனர். மேலும், விஜயின் கேரளா, கர்நாடகா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஆதரவைக் கணக்கில் கொண்டு, தவெக–காங்கிரஸ் கூட்டணியும் சிலர் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், திமுக தலைமையகம் “காங்கிரஸ் எங்களை விட்டு விலகாது” என்று பலமுறை தெளிவுபடுத்தியது.
இன்றைய அறிவிப்பால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
இந்நிலையில், இன்றைய காங்கிரஸ் அறிவிப்பு கூட்டணி மாற்றம் குறித்த அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. திமுகவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்தது, தற்போதைய கூட்டணியைத் தொடரும் முனைப்பைக் காட்டுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், “திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து உறுப்பினர் குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்திருப்பதை வரவேற்கிறேன். ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையை இது வலியுறுத்துகிறது. அரசல்–புரசலான தகவல்களுக்கு இது முடிவு கட்டும்,” என்று தெரிவித்துள்ளார்.

















