திருவாரூரில் ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக்கேட்ட எனக்கும், என் தந்தைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் கொலை மிரட்டல்

திருவாரூரில் ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக்கேட்ட எனக்கும், என் தந்தைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் முன்பு இளம் விவசாயி கண்ணீர் விட்டு கதறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது..

திருவாரூர் அருகே பழவனங்குடி பகுதியில் பாசன வயலுக்கு செல்லும் பாதையில் வரப்பு ஓரம் கொட்டகை அமைத்து சிலர் ஆக்கரமிப்பு செய்துள்ளனர். இதை தட்டிக்கேட்ட இப்பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் அவரது தந்தைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இளம் விவசாயி இளவரசன் கூறும் போது..

பாசன வயலுக்கு செல்லும் பாதையருகே ஆக்கிரமிப்பு கொட்டகை போடப்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என புறப்பட்டபோது, எனது தந்தை என் காலில் விழுந்து தடுத்தார்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு சென்றால் வெட்டுவதாக மிரட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்த நிலையிலும், இந்த பிரச்சனையை கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கலாம் என கூறிவிட்டு கூட்டத்துக்கு வந்தேன். ஆக்கிரமிப்பு தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

சிறு வயது முதலே எனக்காகவே தனது வாழக்கையை அர்ப்பணித்த எனது தந்தையையும் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக போலீசாரிடம் தெரிவித்தும் காவல்துறையினர், நீயென்ன காந்தியா.? ,உனக்கு பட்டம் கொடுக்கபோகிறார்களா என கேட்கின்றனர். அங்கு தெருவில் நடக்க முடியவில்லை. வயலுக்கு போக முடியவில்லை. பெட்டிஷன் கொடுக்க சென்றால் அங்குள்ள இன்ஸ்பெக்டர் பிசிஆர் கேஸ் போடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் சாதி மோதல், கலவரம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பில்லை என அவர் கண்ணீர் விட்டு கதறினார்.

இதையடுத்து, உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நடந்த விவரங்களை புகாராக எழுதி காவல்துறையினரிடம் கொடுங்கள் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து முறையிட்டனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அந்தந்த பகுதி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

குறிப்பாக “சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் தர மறுப்பது போல”, அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பதாக முதல்வர் தெரிவித்த நிலையிலும், இதுவரை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அது எப்போது கிடைக்கும் என விவசாயி ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார். இன்னும் ஒரு வாரத்திற்குள் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் கொரடாச்சேரி, நீடாமங்கலம், ஆயக்குடி, காவனூர், அத்திசோழமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பன்றிகளின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இரவு நேரத்தில் வந்து மிகவும் சேதப்படுத்துகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல பவுன் 1.5 லட்சம் தாண்டிவிட்டது. வெள்ளி 4 லட்சத்தை தாண்டி விட்டது. “கனவுகளிலும், கற்பனைகளிலும் மட்டும் தான் விவசாயிகள் நகைகளை வாங்க கூடிய நிலைமை நிலவுகிறது. இந்த சூழலில் விவசாயிகள் நகை வாங்குவது என்பது இயலாத காரியம். உடனடியாக அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் மொத்தமாக அழிக்கப்படுகிறது. “ஒரு கள நெல்லை கொடுத்து ஒரு குழி வாங்கினோம், மூணு மூட்டை கொடுத்து ஒரு பவுன் வாங்கினோம்” என்ற காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இது ஒரு சர்வதேச பிரச்சனையாக இருந்தாலும் சாதாரண ஏழை எளிய மக்களான விவசாயிகளுக்கு இது சாத்தியப்படாது. அதற்கு தகுந்ததாற்போல நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எவ்வாறு காவந்து பண்ண வேண்டும் என விவசாயி சேதுராமன் கூறினார்.

இந்த அரசு பதவி ஏற்ற உடனே குவின்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் தருகிறேன் என்று கூறினர். ஆனால் கடைசி ஆண்டில் 2500 ரூபாய் தருகிறார்கள். அப்படி என்றால் ஆண்டுக்கு 100 ரூபாய் தான் ஏற்றி இருக்கிறார்கள். இது விவசாயிகளை ஏமாற்றக்கூடிய செயல். எந்த அரசு வந்தாலும் பதவி ஏற்ற உடனே குவின்டால் ஒன்றுக்கு 500 ரூபாய் ஏற்றினால் மட்டுமே விவசாயின் வரவு செலவுக்கு சரிசமமாக இருக்கும்.

100% சதவீதம் அடிப்படை உரங்களின் விலை ஏறியிருக்கிறது. விவசாயிகள் கூலி உயர்ந்திருக்கிறது. விவசாயிகளின் கூலியை உயர்த்தி வழங்குவதற்கு, எங்களுக்கு மனதில் இருந்தாலும் அதை உயர்த்தி வழங்குவதற்கு பொருளாதாரத்தில் இடம் தர மறுக்கிறது.

4 ஆண்டு காலமாக தொடர்ந்து பலமுறை முறையிட்டும் இன்சூரன்ஸ் அரசு ஏற்று நடத்த மறுக்கிறது. விவசாயிகளின் இந்த வாழ்வாதார கோரிக்கையான இன்சூரன்ஸ் அரசு நடத்த வேண்டும் என்று கோரிக்கையை ஏற்க அரசு மறுக்கிறது. விவசாயிகளே ஒன்று திரட்டி இன்சூரன்ஸ் கம்பெனி உருவாக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். 100 கோடி ரூபாய் டெபாசிட் கேட்கின்றனர். அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்த்து 100 கோடி ரூபாய் சேர்த்து இன்சூரன்ஸ் கம்பெனி ஆரம்பிக்கலாம். விவசாயிகளை ஏமாற்றுவதற்காகவே இன்சூரன்ஸ் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றனர். இன்சூரன்ஸ் கம்பெனி அரசு ஏற்று நடத்துவது சாத்தியப்படக்கூடிய செயல்தான். இதனை அரசு செய்ய வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கலெக்டர் முன்பு இளம் விவசாயி கண்ணீர் விட்டு கதறியது – அனைத்து பகுதி விவசாயிகளின் காரசாரமான கோரிக்கைகளால் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது.

Exit mobile version