கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (SIR) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முந்தைய பட்டியலுடன் தொடர்பு படுத்த முடியாத ‘நோ மேப்பிங்’ (No Mapping) வாக்காளர்களைக் கண்டறிந்து ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய தொகுதிகளில் கடந்த மாதம் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், நீண்டகாலமாக முகவரியில் இல்லாதவர்கள், இறந்துபோனவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய சிக்கலாக 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டு பட்டியலுடன் விவரங்கள் பொருந்தாத வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, பொள்ளாச்சி தொகுதியில் 32,855 பெயர்கள் நீக்கப்பட்டு, தற்போது 1,96,375 வாக்காளர்கள் உள்ளனர். வால்பாறை தொகுதியில் 29,839 பெயர்கள் நீக்கப்பட்டு, 1,68,251 வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். கிணத்துக்கடவு தொகுதியில் அதிகபட்சமாக 73,187 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பழைய வாக்காளர் பட்டியலுடன் தங்களது அல்லது பெற்றோரின் விவரங்களைச் சரியாக இணைக்காத மற்றும் போதிய ஆவணங்கள் வழங்காத ‘நோ மேப்பிங்’ வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தொகுதியில் 6,484 பேருக்கும், வால்பாறை தொகுதியில் 2,724 பேருக்கும் என மொத்தம் 9,208 பேருக்கு இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு, அவர்கள் நேரில் அழைக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட புனித லூர்து அன்னை ஆரம்பப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு மையங்களில் நேற்று ஆவணச் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றன. சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், வாக்காளர்கள் கொண்டு வந்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், “நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக் உள்ளிட்ட தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்துத் தங்களது அடையாளத்தை உறுதி செய்து கொள்ளலாம். இதன் மூலம் போலி வாக்காளர்களை முழுமையாக நீக்கி, தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்க முடியும்” எனத் தெரிவித்தனர்.
பெயர் சேர்க்க விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் வரும் ஜனவரி 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், சிறப்பு முகாம்களில் விண்ணப்பப் படிவங்கள் குவிகின்றன. பொள்ளாச்சி தொகுதியில் மட்டும் இதுவரை 3,479 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆவணச் சரிபார்ப்பு மற்றும் புதிய சேர்க்கைப் பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர், குளறுபடிகளற்ற இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
