ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியின் 19-வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் மிகுந்த உற்சாகத்துடனும் கலை நயத்துடனும் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் ஆடல் அரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பள்ளிப் பொறுப்பாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். விழாவின் தொடக்கமாகப் பள்ளி முதல்வர் கவிதா அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், நடப்பு கல்வியாண்டில் பள்ளியின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த விரிவான ஆண்டறிக்கையை வாசித்தார். கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் இப்பள்ளி ஆற்றி வரும் பங்கு குறித்துப் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாடு ப்ரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் நலச்சங்க மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சண்முகம், சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வாசன், ராமேஸ்வரம் நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தில் குமார் மற்றும் விவேகானந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசுகையில், மாணவர்கள் வெறும் பாடப்புத்தகக் கல்வியோடு நின்றுவிடாமல், தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர். தொடர்ந்து, கல்வியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் ஒரு முக்கிய அம்சமாக, யோகா போட்டிகளில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சாதனை படைத்த 8 மாணவர்களுக்கு எவர்கிரீன் மெட்டல் பன்னாட்டு நிறுவனம் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் இந்திய வணிக நிறுவன இயக்குநர் முனீஸ்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியதோடு, அந்த 8 மாணவர்களும் தங்களது உயர்கல்வியை முடித்தவுடன் அவர்களுக்குத் தனது நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தையும் வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்குப் பெரும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. பாரம்பரிய நடனம் மற்றும் சமூக விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த விழாவில் குஞ்சார் வலசை கிராமத் தலைவர் காளிமுத்து, செயலாளர் ஓம் பிரகாஷ், பல்வேறு தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
