“அமித்ஷாவிடம் சரண்டர் ஆனார் எடப்பாடி பழனிசாமி” – முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !

“அமித்ஷாவிடம் விழுந்து எடப்பாடி பழனிசாமி சரண்டர் ஆகிவிட்டார்” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மாமல்லபுரத்தில் திமுக சார்பில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற பிரச்சாரத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில், “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பு பணிகள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்று வந்தது.

அதில் பேசுகையில் முதல்வர் ஸ்டாலின்,

“2026 சட்டசபைத் தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சியில் நம்பிக்கை வைத்துள்ளனர். 2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது,”
என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

“சுணங்கி சும்மா இருந்துவிட்டால் தேக்கம் வரும். உழைப்பை தொடர்ந்து லட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் மீதமுள்ளவற்றையும் நிச்சயமாக நிறைவேற்றுவோம். நமது சாதனைகள் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் சென்றடைந்துள்ளன.”

“2026 தேர்தல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தலைநிமிர்ந்து நிற்கும் நம் ஆட்சியா, டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இது. இந்தி, சமஸ்கிருதம், ஜிஎஸ்டி, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றின் பெயரில் தமிழ்நாட்டுக்கு அநீதி நடந்துள்ளது. அதனால் இந்த தேர்தல், தமிழ்நாட்டின் சுயமரியாதையை காப்பாற்றும் ஒன்றாகும்.”

“தமிழகத்தை அழிக்க இன எதிரிகளும் தமிழ் துரோகிகளும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் திமுக இருக்கும் வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது. அதனால்தான் பாஜக வாக்காளர் பட்டியலில் குறுக்கு வழிகளை நாடுகிறது. வாக்குரிமையை பறிக்க முயல்கிறது. அதனால் அந்த திருத்தப் பணியை கட்சியினர் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்,” என்றும் அறிவுறுத்தினார்.

அமித்ஷாவிடம் சரண்டர் ஆன எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில்,

“பெயரளவில் திராவிட கட்சியாக இருந்த அதிமுகவை அமித்ஷாவிடம் அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் வருவதாக கூறி பார்த்தார். ஆனால் யாரும் சேரவில்லை. கட்சியின் உரிமைகளையே பாஜகவிடம் அடகு வைத்தவர்களுக்கு, மக்களின் உரிமைகள் பற்றி கவலைப்பட நேரமில்லை,” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக தாக்கினார்.

Exit mobile version