கோவை விமான நிலையத்தில் மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் நாடாளுமன்ற பதவி நேற்றுடன் நிறைவு பெற்றது எனவும்,கலைஞர் கருணாநிதியால் நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர், 30 ஆண்டுகள் நாடளுமன்றத்தில் பணியாற்றியுள்ளார் எனவும், நேரு, சாஸ்திரியை தவிர்த்து 12 பிரதமர்களுடன் நாடாமன்றத்தில் வாதம் செய்துள்ளார் வைகோ எனவும் தெரிவித்தார்.
இன்றைய தலைமுறை வைகோவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அன்புமணி போன்றவர்கள் பங்கேற்காதது குறித்து பத்திரிக்கையாளர்கள் தான் சொல்ல வேண்டும் என தெரிவித்த அவர், யாராக இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பணிகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். கமலஹாசனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அவருக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்களுக்கு உரிமைகள் பெற்றிடவும் ,தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் அவர் பேசுவார், அந்த நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மல்லை சத்யா விவகாரத்தை நாங்கள் கடந்து விட்டோம், அவரைப் பற்றி பேசி தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனவும் திருச்சியில் மாநாடு நடத்துவதை பற்றி தான் நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் எனவும் தெரிவித்தார். அவர் குறித்து பேசுவதே நேர கொலை என தெரிவித்த அவர், ஒவ்வொரு இயக்கத்திலும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதும், வெளியில் செல்வதும் இருக்கும் எனவும், இந்த நபரின் குற்றச்சாட்டும், அதற்கு உண்டான விளக்கத்தை ஏற்கெனவே நான் சொல்லி இருக்கிறேன், தலைவரும் சொல்லியிருக்கிறார், எங்கள் கட்சியின் நிர்வாகிகள் சொல்லி இருக்கின்றனர், அவரது குற்றச்சாட்டுக்கு பதில்கள் சொல்லி இருக்கிறோம் எனவும், தயவுசெய்து மல்லை சத்யாவை கடந்து செல்வோம் என தெரிவித்தார். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும் எனவும் விமர்சனங்களுக்கு பதில்கள் கொடுத்து இருக்கிறோம் என தெரிவித்த அவர், மக்களுக்கான; விஷயங்களை பேசுவோம் எனவும் தெரிவித்தார்.
கூட்டணிக் கட்சிகளை திமுக விழுங்கி கொண்டு இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்றத் தேர்தல் வருகிறது , அவருடைய வேலையை செய்கிறார், குழப்பம் ஏற்படுமா என பார்க்கின்றார் என தெரிவித்து அவர் அது அதிமுக கட்சியின் தலைவர் உடைய கருத்து என தெரிவித்தார்.
மல்லை சத்யாவிற்கு ஆதரவாக கட்சியில் இருந்து யாரும் செல்லவில்லை என தெரிவித்த அவர், திமுக கூட்டணியில் இன்னும் சீட் பங்கீடு குறித்து பேசவில்லை எனவும் தெரிவித்தார். இரட்டை இலக்க தொகுதிகளில் தான் நிற்க வேண்டும் என சொல்லியதாக சொல்கின்றார்களே என்ற கேள்விக்கு, நான் இதற்கு ஏற்கனவே தெளிவான பதில் சொல்லிவிட்டேன் , போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது மாட்டி விட்டு விடாதீர்கள் என துரை வைகோ தெரிவி்தார்.