தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதில் திமுகவின் மூத்த அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஒத்த கருத்துடன் பிடிவாதம் காட்டி வருவது, கூட்டணியில் உள்ள மதிமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தீப்பட்டி சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற துரை வைகோ, தற்போது தனது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மதிமுகவின் செல்வாக்கை உயர்த்தத் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். டெல்லியில் திருச்சி மாவட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காகக் குரல் கொடுக்கும் அதே வேளையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் திருச்சியில் ஒரு தொகுதியையாவது மதிமுக வசம் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார். குறிப்பாக, மதிமுகவின் முக்கிய நிர்வாகியான மருத்துவர் ரோஹைய்யா ஷேக் முகமதுவுக்குத் திருச்சியில் ஒரு சீட் பெற்றுத் தர வேண்டும் என்பது துரை வைகோவின் நீண்ட நாள் திட்டமாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை ரோஹைய்யா ஷேக் முகமது தற்போதே தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், மதிமுகவின் இந்தத் திட்டம் திருச்சி மாவட்ட திமுக அமைச்சர்களான கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோருக்குச் சற்றும் உடன்பாடு இல்லாத ஒன்றாக மாறியுள்ளது. பொதுவாகவே திருச்சி அரசியலில் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகிய இருவருக்கும் இடையே ஒரு மறைமுக அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. தத்தமது ஆதரவாளர்களுக்கு அதிக சீட்களைப் பெற்றுத் தந்து, மாவட்டத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்பதில் இருவருமே முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இருவரும் ஓரணியில் திரண்டு, “திருச்சியின் 9 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னமே போட்டியிட வேண்டும்; தோழமைக் கட்சிகளுக்குத் திருச்சியில் இடம் ஒதுக்கக் கூடாது” என திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத் தேர்தலின் போது துரை வைகோவின் வெற்றிக்காக நேரு கடுமையாகப் பணியாற்றியிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு திமுக – மதிமுக நிர்வாகிகள் இடையே திருச்சியில் சுமூகமான உறவு நீடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொடங்கவுள்ள அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், துரை வைகோவின் பிடிவாதமும், அமைச்சர்களின் எதிர்ப்பும் எந்த மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திருச்சியில் மீண்டும் உதயசூரியன் முழுமையாகத் தடம் பதிக்குமா அல்லது கூட்டணி தர்மத்திற்காகத் துரை வைகோவின் கோரிக்கை ஏற்கப்படுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெளிவாகத் தெரிந்துவிடும்.
