மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாமரத்து மேடையில் திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆடி உற்சவ தீமிதி திருவிழா வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திரௌபதி அம்மன் கோவில் 18ம் ஆண்டு ஆடி உற்சவ தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த 21ஆம் தேதி துவங்கியது. இதனை தொடர்ந்து திரௌபதி அம்மன் திருக்கல்யாண உற்சவம், தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார வீதியுலா காட்சியும் நடந்தது.
இந்த விழாவில் முக்கிய நிகழ்வான பச்சைக்காளி, பவளக்காளி, அரவான்கள் பலி, காளியாட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் காளியின் திருஉருவம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
காளியாட்டம் என்பது அம்மன் வழிபாட்டின் ஒரு முக்கிய நிகழ்வாக இருப்பதால் இதில் பக்தர்கள் காளி வேடம் அணிந்து ஆடுவது வழக்கம். மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக இருக்கிறது.
இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்வாக இன்று(ஆக. 4) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.