போதைப்பொருள் வழக்கு: அமலாக்கத்துறையில் நடிகர் கிருஷ்ணா விசாரணைக்கு ஆஜர் !

சென்னை: போதைப்பொருள் வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய நடிகர் கிருஷ்ணா இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு பதில் அளித்தார்.

குறிப்பாக, நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில், கடந்த ஜூன் மாதத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வழக்கில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கைதான அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி டி. பிரசாத் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின், நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு, இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

போதைப்பொருள் கடத்தல் சங்கிலியில் இடம்பெற்ற பணப்பரிவர்த்தனை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பாக கெவின் எனும் நபரும், கானா நாட்டைச் சேர்ந்த ஜான் எனும் நபரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் இடம்பெற்றதாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஸ்ரீகாந்த் ஆஜராகவில்லை.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி, அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version