“திராவிடக் கட்சிகள் செய்தி அரசியலையே செய்வதோ தவிர, சேவை அரசியலும் செயல் அரசியலும் செய்யவில்லை” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், திமுகவின் ‘ஓரணியில் தமிழகம்’ திட்டத்தை ஆளுமை இல்லாததாக விமர்சித்தார். அவர் கூறியதாவது :
“’ஓரணியில் தமிழகம்’ என்பது ஹிந்தி திணிப்புக்கு எதிரானதா? என்று பார்க்கும் போது, அதுவும் இல்லை. திராவிடக் கட்சிகள் செய்தி அரசியல்தான் செய்கின்றன. சேவை அரசியலும் செயல் அரசியலும் செய்யத் தெரியாது. வீடு தேடி அரசு வருகிறது எனச் சொல்வதற்குள், மக்கள் சாலையில் இறங்கி போராடி வருகின்றனர். வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக, ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்துவிட்டதாக திமுக கூறுகிறது.”
“ஓட்டு வாங்க பணமா தரப் போகிறீர்களா?”
தொடர்ந்து அவர் கூறியதாவது:
“ஏற்கனவே ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த ஒரு கோடி பேர் ஓட்டு போட்டாலே திமுக வெற்றிபெறலாம். பின்னோ ஏன் பணம் கொடுக்கிறீர்கள்? உங்க கிட்ட இருந்து தான் இந்த மண்ணையும், மானத்தையும் காப்பாற்றணும்.”
“சாராயமில்லாமல் கூட்டம் பார்க்கலாம்”
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரும் தனக்குப் போல் சாராயமும் சாப்பாடும் இல்லாமல் கூட்டம் நடத்தலாம் எனவும் அவர் சவால் விடுத்தார்.
“நானும் பேசுகிறேன், ஸ்டாலினும் பேசட்டும். யார் சொல்றதுக்காக மக்கள் வருகிறார்கள் என்று பந்தயம் வைச்சுக்கலாம். நீங்கள் ரோடு ஷோ போடுறீர்கள். அதில் மக்கள் சும்மா பார்ப்பதற்காகத்தான் வருகிறார்கள்.”
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு, அரசியல் பிரசாரமா ?
டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 13 லட்சம் பேர் எழுதினர். அந்த தேர்வில் ‘விடியல் பயணம் எப்போது தொடங்கியது?’ என கேள்வி கேட்கப்பட்டது. இது ஒரு அரசியல் சாயல் கொண்ட கேள்வி என சீமான் விமர்சித்தார்.
“தேர்வாணையத் தலைவர், அரசியல் கேள்விகளை தவிர்க்க சொல்லியிருக்கிறேன் என்கிறார். ஆனால் ‘விடியல் பயணம் எப்போது?’ என்பது அரசியல் கேள்வியே இல்லை. அரசு அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தையே நடத்தி வருகிறது” எனக் குற்றம்சாட்டினார்.