கோவை – கேரளா எல்லையில் அதிரடி: அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட ரூ. 8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், முறையான ஆவணங்களின்றி கடத்திச் செல்லப்பட்ட சுமார் 8.69 கிலோ தங்க நகைகளை கேரள மாநிலக் கலால்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் கலால்துறை அதிகாரிகள் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவையிலிருந்து பாலக்காடு வழியாக கொட்டகரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கேரள அரசுப் பேருந்தை மறித்துச் சோதனை செய்தனர். அந்தப் பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த இரு இளைஞர்களின் உடைமைகளைச் சோதித்தபோது, அதற்குள் கட்டுக்கட்டாக தங்க நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், பிடிபட்டவர்கள் மும்பையைச் சேர்ந்த சங்கீத் அஜய் மற்றும் கிதேஷ் சிவராம் சேலங்கி என்பது தெரியவந்தது. இவர்கள் மும்பையிலிருந்து இரயில் மூலம் கோவைக்கு வந்து, அங்கிருந்து திருச்சூரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு இந்த நகைகளைக் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளனர். சுமார் 8.69 கிலோ எடை கொண்ட இந்த நகைகளின் மதிப்புச் சந்தையில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிடிபட்ட நகைகளுக்கு எவ்விதமான வரியோ அல்லது முறையான கொள்முதல் ஆவணங்களோ இல்லாததால், இவை வரி ஏய்ப்பு செய்து கடத்தப்பட்டவை என்பது உறுதியானது.

இதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பிடிபட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காகச் சுங்கத்துறை (Customs) அதிகாரிகளிடம் கலால்துறையினர் ஒப்படைத்தனர். சமீபகாலமாகத் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தங்கம் மற்றும் ஹவாலா பணம் கடத்தப்படுவது அதிகரித்து வருவதால், எல்லையோரச் சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சூர் மற்றும் மலப்புரம் போன்ற கேரளாவின் முக்கிய நகை விற்பனை மையங்களை நோக்கி இத்தகைய கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, இதன் பின்னணியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் கடத்தல் கும்பல் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version