கூட்டணி விவகாரத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் முக்கிய அறிவுறுத்தல்
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
தேர்தல் தயாரிப்பின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள், பூத் கமிட்டி ஒருங்கிணைப்பு மற்றும் SIR பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி விரிவாக வழிகாட்டினார். வாக்காளர் பட்டியலில் இரட்டைப் பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் இப்பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, பூத் கமிட்டி செயல்பாடுகளை உறுதியாக முன்னெடுத்தால் தேர்தலில் வெற்றி நிச்சயம் என நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளித்தார்.
இதனுடன், கூட்டணியைப் பற்றிய கேள்விகளில் அதிமுக நிர்வாகிகள் பொதுவெளியில் எந்த வகையிலும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், “கூட்டணி குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அது தானாகச் சரியாக நடைபெறும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

















