நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவலின்படி, அதிமுக – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைய விஜய்யை அழைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விஜய்யின் எதிர்கால அரசியல் நிலைப்பாட்டை கருத்தில் கொண்டு, ராகுல் காந்தி நேரடியாக ஆலோசனை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விஜயை சேர்க்க பாஜக முயற்சி ?
அதிமுக – பாஜக கூட்டணிக்குள் விஜய்யை சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக டெல்லி அரசியல் வட்டாரங்களில் இருந்து பிரபல தமிழ்நாட்டு வழக்கறிஞர் ஒருவரின் மூலம் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யை துணை முதல்வர் வேட்பாளராக முன்வைத்து கூட்டணியில் இணைக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியின் எச்சரிக்கை
இந்நிலையில், ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசியில் பேசி, “அந்த முடிவு உங்கள் அரசியல் பிம்பத்தையும், நீண்டகால நம்பகத்தன்மையையும் பாதிக்கலாம்” என்று எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும், நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு, பாசிச அரசியலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றில் வித்தியாசமான நிலைப்பாட்டில் உள்ள நீங்கள், பாஜக கூட்டணியில் சேர்வது உங்கள் கொள்கை அடிப்படையை பலவீனப்படுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்ததாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.
அதே நேரத்தில், குறுகிய கால அரசியல் பலன்களுக்காக நீண்டகால அரசியல் மரியாதையை இழக்கக் கூடாது என்றும், பிற மாநில அரசியல்வாதிகள் பாஜகவுடன் இணைந்த பின் மக்களின் நம்பிக்கையை இழந்ததை எடுத்துக்காட்டாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் பதில்
ராகுலின் ஆலோசனையை அமைதியாக கேட்ட விஜய், தனது கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்தி, மக்களின் மனநிலையை முழுமையாகப் புரிந்த பின்பே எந்தவொரு கூட்டணி முடிவையும் எடுக்க விரும்புவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இரு தரப்பிலிருந்தும் வெளியாகவில்லை என்றாலும், 2026 தேர்தலை முன்னிட்டு விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மீதான ஆர்வம் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்து வருகிறது.
