“தவெக-வை புறக்கணிக்காதீர்கள்… எங்களையும் கூப்பிடுங்கள்” – தேர்தல் ஆணையருக்கு விஜய் கடிதம்

சென்னை: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைகள் மற்றும் SIR – வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு தொடர்பான அனைத்து கூட்டங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தை புறக்கணித்து வருவதாகவும், இனி நடைபெறும் அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களில் கட்சிக்கும் அழைப்பு வழங்க வேண்டும் என்றும், கட்சி தலைவர் விஜய் தேர்தல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசு–எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் இணைந்துள்ள நிலையில், அதிமுக–பாஜக கூட்டணி உருவாகும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. பிற கட்சிகள் இன்னும் கூட்டணியைத் தீர்மானிக்காத சூழல் நிலவுகிறது.

இதே நேரத்தில், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்க உள்ள தவெக பற்றிய அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் கூட்டங்களில் கட்சிக்கு அழைப்பு விடப்படாதது குறித்து விஜய் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள தனது கடிதத்தில் விஜய் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தமிழக வெற்றிக் கழகம் மாநிலம் முழுவதும் தன்னுடைய நிலைப்பாட்டை உருவாக்கியுள்ள நிலையில், அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பது பொருட்படுத்தாமல் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பளித்தல் அரசியலமைப்பின் அடிப்படை கூறாகும் என அவர் வலியுறுத்துகிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் தவெக பெயர் இடம்பெற்றிருந்தபோதும், ஆலோசனைக் கூட்டங்களுக்கு கட்சி அழைக்கப்படவில்லை. இது சமத்துவத்திற்கும் வெளிப்படைத்தன்மைக்கும் முரணானது என விஜய் குறிப்பிடுகிறார்.

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனைகளிலும் தவெக தொடர்ந்து நீக்கப்படுவது, தேர்தல் செயல்முறையை கண்காணிக்கும் ஒரு பெரும்பான்மை வாக்காளர் பிரிவை பிரதிநிதித்துவம் பண்ணாமல் விடுகின்றது என்று அவர் கூறுகிறார்.

எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து கூட்டங்கள், ஆலோசனைகள், ஒருங்கிணைப்பு சந்திப்புகள் ஆகியவற்றில் தவெகக்கும் முறையான தகவல் அனுப்பி பங்கேற்க அழைக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரிவு 324-ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில தேர்தல் ஆணையத்துக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும் இதுகுறித்து உரிய வழிமுறைகள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் விஜய் கேட்டுக்கொள்கிறார்.

    தனது கடிதத்தின் மூலம், நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் செயல்முறை உருவாக வேண்டும் என்ற நோக்கில் தவெக முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக விஜய் உறுதியளித்துள்ளார்.

    Exit mobile version