சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற ‘திமுக 75 – அறிவுத் திருவிழா’ மாநாடு கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் திமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் இளம் பேச்சாளர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அமர்வில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் பேசினார்.
அப்போது அவர், “விஜய் கட்சியைச் சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். அவர்களிடம் நாம் போய் உரையாட வேண்டும். அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “திமுகவில் தற்போது 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்கள் இந்த இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு பேச வேண்டும். விமர்சிக்காமல், உரையாடல் மூலமாக அவர்களை நம் பக்கம் கொண்டு வர வேண்டும்,” என்றும் கூறினார்.
இந்த கருத்துகள் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. விஜய் ரசிகர்களை குறை கூற வேண்டாம் என திமுக எம்.எல்.ஏ எழிலன் நாகநாதன் தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.
