சென்னை :
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில், அவரை நேரில் பார்வையிட யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நல்லகண்ணு, தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாச உதவி வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“மருத்துவர்கள் மிகுந்த கவனத்தோடு சிகிச்சை அளித்து வருகின்றனர். செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்ட நிலையில், நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் நேற்று இரவு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
மேலும், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் இன்று மதியம் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வந்து நல்லகண்ணுவை பரிசோதிக்க உள்ளனர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அவரை நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்” என தெரிவித்தார்.















