கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசல் விபத்தில் பலர் உயிரிழந்ததை அடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தவெக சார்பில் கொண்டாட வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரும், அவருக்கு அடைக்கலம் வழங்கியதாக கூறப்படும் நகரச் செயலாளர் பவுன்ராஜும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மதியழகன் மற்றும் பவுன்ராஜ் சமீபத்தில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைவர் விஜயை சந்தித்து பேசினர். விஜய், அவர்களிடம் “அந்த நேரத்தில் உங்களை நேரில் பார்க்க முடியவில்லை” என வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் என். ஆனந்த், சென்னை நீலாங்கரையில் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், கரூர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு தவெக சார்பில் எந்த விதமான தீபாவளி கொண்டாட்டமும் நடத்தக்கூடாது என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த முடிவு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் நினைவாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
