“ஒரு வாக்கும் சிதறாமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாக்குகள் முழுமையாக தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே விழும்” என வி.சி.க. தலைவர் திருமாவளவன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் திறப்பு விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசும் போது, திருமாவளவன் தமது கட்சி தி.மு.க. ஆட்சியை முழுமையாக ஆதரிக்கத் தயார் என வலியுறுத்தினார்.
“ஒட்டுமொத்தமாக விழும் வாக்குகள்”
“100 வாக்குகளில் 25 வாக்குகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்குகள் என உறுதி கூறலாம். அவை சிதறாமல், கொத்துக் கொத்தாக தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு விழும் வகையில், நாங்கள் முழு நீள களப்பணியில் ஈடுபடுவோம்” என அவர் தெரிவித்தார்.
மக்கள் நலனில் அக்கறையுடன் உள்ள அரசு
தி.மு.க. அரசு மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தும் ஆட்சியாக செயல்படுவதாகவும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் பாராட்டினார். “45 நாட்களில் தீர்வு காணப்படும்” என உறுதியளிக்கும் அரசு, மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கும் அரசாக திகழ்கிறது என்றார்.
ஸ்டாலின் ஆட்சிக்கு பாராட்டு
“முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாரம்பரியத்தை விட மிக வலிமையான நிர்வாகத்துடன் செயல்படுகிறார். தோழமை கட்சிகளை வெற்றிகரமாக ஒன்றிணைத்து வழிநடத்தும் தலைவராகவும், திட்டங்களை முன்னோக்கி செயல்படுத்தும் ஆற்றல் மிக்கவராகவும் திகழ்கிறார்” என கூறினார்.
2026 சட்டசபை தேர்தல் நோக்கு
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி “ஓரணியில் தமிழகம்” என்ற முழக்கத்தோடு வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார். “மற்ற கட்சிகள் தனித்தனி பெயர்களாகவே இருப்பார்கள். ஆனால் திராவிட மாடல் அரசு மீண்டும் மலரும்” என்றார்.