பெரம்பலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிக்கான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், தமிழ்நாடு உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் நோக்கம், தமிழக அரசு மாணவர்களுக்காக கொண்டு வந்துள்ள திட்டங்கள் மற்றும் அதன் மூலம் பயன் அடைந்தவர்களின் எண்ணிக்கை, இந்த திட்டங்களில் பயன்பெற மாணவ மாணவிகள் என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு உயர் கல்வியில் வளர்ச்சியடைந்துள்ளது, அதற்கு காரணம் தமிழக அரசும்,தமிழக மக்களும், தமிழ் பற்றுள்ளவர்களும் தான் எனவே மாணவ மாணவிகள் அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நன்றாக படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, அமைச்சர் கோவி.செழியன், திமுக தலைவராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்று எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்து தெரிவித்தார்.கடந்த காலங்களில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை மிக குறைவாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஒவ்வொரு அரசுக் கல்லூரியையும் தனித்தனியே ஆய்வு செய்து அந்த கல்லூரிகளில் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் புதிய பாடப்பிரிவுகளை துவங்கியுள்ளது.
இடைநிற்றலை தடுக்க எடுக்கப்பட்ட பெரும் முயற்சி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கூட 20% மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உயர்கல்விக்கு துறைக்கு கிடைத்த மிகப்பெரிய நற்சான்று என்றார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு உண்டான டெண்டர்கள் விடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பரிச்சார்த்த முறையில் சில இடங்களில் லேப்டாப் வழங்கப்பட்டிருக்கிறது.
அது அடுத்த சில மாதங்களில் முழுமை பெறும் என்றார். தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாநாட்டில் தொண்டர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட விவகாரத்தில் தற்போது இரண்டு பேர் தன்னை தான் தூக்கி வீசியதாக மாறி மாறி கூறி வருகிறார்கள். மேலும் இதற்கு பின்னணியில் ஆளும் கட்சி இருப்பதாக தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர் என்று கேட்ட போது, அரசியலில் கோமாளித்தனமான சில கேள்விகளையும், பதில்களையும் தமிழக வெற்றி கழகத்தினர் எழுப்புவது, அவர்களுடைய இயற்கை குணமாக இருக்கலாம் அதைப்போல அற்புத்தனமான மலிவான அரசியலை திமுக ஒருபோதும் செய்வதில்லை. இது கொள்கை வழியான இயக்கம். கொள்கைக்கவும், லட்சத்திற்காகவும் மட்டுமே போராடும். எனவே தனிநபர் ஒருவரை பவுன்சர்கள் தூக்கி எறிந்தார்கள், அவர் இந்த மாவட்டம் அந்த மாவட்டம் அதில் திமுக அரசியல் செய்கிறது என்ற பேச்சு கேலிக்கூத்தானது வெட்கக்கேடானது என்றார்.