மதுரை: “2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்ற பயத்தால், திமுக ஏற்கனவே தோல்விக்கான காரணம் தேடி வருகிறது,” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர், “நெல் கொள்முதல் தொடர்பாக நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உணவுத்துறை அமைச்சர் தினமும் 2,000 மூட்டை நெல் கொள்முதல் செய்கிறோம் என்று தெரிவித்தார். ஆனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். துணை முதல்வர் விவசாயிகளை சந்திக்காமல், ரயிலுக்கு கொடி காட்டிவிட்டு சென்றது திமுக ஆட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது,” என்றார்.
இபிஎஸ் மேலும், “முதல்வர் கூறியபடி ஒவ்வொரு ஆண்டும் 42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அரசின் கொள்கை விளக்க குறிப்புப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 1 கோடியே 15 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் முதல்வரின் எண்கள் பொய்யென நிரூபணமாகிறது,” எனக் கூறினார்.
அவர் மேலும், “திருச்சியில் நெல் தேங்கி கிடக்கிறது. சதுப்புநிலங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் எழுப்பப்பட்டு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன,” என்றும் குற்றம்சாட்டினார்.
“‘எஸ்.ஐ.ஆர்’ என்ற வார்த்தை கேட்டாலே திமுக அதிர்ச்சியடைகிறது. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படவில்லை. திமுக ஆளுங்கட்சி என்பதால் அவர்களுக்கே பயம். 2026 தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதால் திமுக ஏற்கனவே பதட்டத்தில் உள்ளது,” என்றார்.
தினகரனின் ஒருங்கிணைப்பு முயற்சி குறித்து, “அவர் நான்கு ஆண்டுகளாக அதே பேச்சை கூறி வருகிறார். ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா யாரும் அவருடன் பேசவில்லை. இப்படிப்பட்ட துரோகிகள் காரணமாக 2021இல் அதிமுக ஆட்சிக்கு வர முடியவில்லை. இவர்கள் திமுகவின் பி டீம்,” என்று இபிஎஸ் விமர்சித்தார்.
“தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமில்லை. தேர்தல் நெருங்கும் போது கூட்டணிகள் அமையும். தற்போது தவெக உடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.
முடிவில், “திமுக அரசு விவசாயிகளின் பிரச்சனைகளை புறக்கணித்து விளம்பர அரசியலில் மூழ்கியுள்ளது. உண்மையை மக்கள் தெரிந்து கொண்டுவிட்டனர். 2026 இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்,” என இபிஎஸ் தெரிவித்தார்.

















