கோவை: சமஸ்கிருதத்தைக் “செத்த மொழி” என்று குறிப்பிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிராக, திமுக தான் தமிழின் அடையாளத்தை குறைக்கும் வகையில் பேச்சாற்றுவதாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, “சமஸ்கிருதம் செத்த மொழி; அதற்கே மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது. பிரதமர் மோடி தமிழ் மீது அக்கறை கொண்டவர் போல நாடகம் ஆடுகிறார்” என கூறியிருந்தார். இந்த கருத்து தவறானதும் அவமானகரமானதும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
விமர்சனங்களை வலுப்படுத்திய அவர், “துணை முதலமைச்சர் பதவி உதயநிதிக்கு கிடைத்தது அரசியல் வாரிசுரிமையால் மட்டுமே. அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி எந்த பின்னணியும் இல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்தவர். அவரை விமர்சிக்க உதயநிதிக்கு உரிமையும் தகுதியும் இல்லை” என்றார்.
அவர் மேலும், “திமுக திராவிடம், திராவிடர், திராவிட மாடல் என கூறி ஒரு நூற்றாண்டாக தமிழர் அடையாளத்தை மங்கச் செய்துள்ளது. தமிழ் மீது அக்கறை கொண்டவர் போலத் தோன்றுவது திமுகதான்” என குற்றம்சாட்டினார்.
சமஸ்கிருதத்தின் நிலைப்பாட்டை விளக்கிக் கூறிய அவர், “ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். அதனால்தான் அரசியலமைப்பு வடிவமைப்பின் போது அம்பேத்கர் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக பரிந்துரைத்தார். அதை ‘செத்த மொழி’ என்று குறைப்பது ஜனநாயக மரபுக்கு விரோதம்” என கூறினார்.
சமஸ்கிருதம் தாய்மொழியாக பேசுபவர்கள் குறைவாக இருப்பதால் அதன் மேம்பாட்டிற்காக மத்திய அரசு நிதி ஒதுக்குவது இயல்பு எனவும், “உருது மொழிக்கே கூட மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குகிறது என்பதை உதயநிதி சொல்லவில்லை. மற்ற மொழிகளை இழிவுபடுத்துபவர்கள்தான் உண்மையான பாசிசம் பேசுபவர்கள்” என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சமஸ்கிருதத்தையும், இந்திய மொழிகளையும் மதிப்பது தேசியக் கடமையாகும்; மொழிகளை அவமதிப்பவர்களுக்கு மக்கள் உரிய பதிலை தருவார்கள் என அவர் வலியுறுத்தினார்.
















