“தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதையே திமுக வளர்த்துக் கொண்டு வருகிறது. பாஜகக் கட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வகுப்பு எடுக்க தேவையில்லை,” என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :
“தமிழகத்தில் வேலை தேடி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த உழைப்பாளர்களை திமுகவினர் அவமதித்து, வன்மத்துடன் தகாத வார்த்தைகளால் அவதூறு பரப்பி வருகின்றனர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் உண்மை வெளிச்சமிட்டுவிட்டது என்பதில் ஆத்திரம் அடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தமிழர்களுக்கு எதிராக பேசுகிறது என தவறான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.
திமுகவிடம் கேள்வி எழுப்பினால் அது தமிழர்களுக்கு எதிரானது எப்படி ஆகும்? பீகார் உட்பட வட மாநில மக்களை எதிர்த்து வன்மத்தையும் வெறுப்பையும் பரப்புவது திமுகவினர் தானே? 2021 ஆம் ஆண்டில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர், இத்தகைய வெறுப்பு பிரசாரம் உச்சத்தை எட்டியுள்ளது. ‘வடக்கன்’ என்ற சொல்லை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் வெறுப்பை பரப்பியதும் திமுகவினரே.
தனது ஆட்சியில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயங்கும் ஸ்டாலின், பாஜக மீது பொய்யான பிரச்சாரம் நடத்த வேண்டாம். தமிழகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்காவிட்டாலும், குறைந்தபட்சம் வெறுப்பை விதைப்பதை நிறுத்த வேண்டும்,” என எல். முருகன் வலியுறுத்தினார்.
அத்துடன், காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சித்தார். “பீகார் மக்களை அவமதிக்கும் திமுகவினரை காங்கிரஸ் எப்போது கண்டித்தது? நேரம், சூழ்நிலைக்கேற்ப முகம் மாறும் காங்கிரஸ் கட்சி, இப்போது மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறியுள்ளார்.
 
			















