‘திமுக தான் விஜய்க்கும் ராஜ்யசபா சீட்டு தரப்போகிறது’ – கரு.பழனியப்பன் விமர்சனம்

சிவகங்கை : மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக வழங்கிய ராஜ்யசபா சீட்டை குறிப்பிட்டு, எதிர்காலத்தில் விஜய்க்கும் அதேபோல் சீட்டு தரப்படலாம் என திரைப்பட இயக்குனரும் திமுக தலைமை கழக பேச்சாளருமான கரு.பழனியப்பன் சூசகமாக விமர்சித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாசிலை அருகில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்”, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற தீர்மான கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கரு.பழனியப்பன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “சிவகங்கையில் மட்டும் 5 லட்சம் பேர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்துள்ளனர். இன்றைக்கு விஜய் இந்தியாவை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். அப்படியிருக்க அவர் எங்களுடன் நிற்க வேண்டியதுதானே? புதிய ஐடியா வந்தால் தனி கடை போட வேண்டிய அவசியமில்லை. விஜயை நான் எங்கும் தனியாக விமர்சிக்கவில்லை. ஏனென்றால், நாளை அவர் திமுகவோடு சேர்ந்து விடுவார். அப்போது நாம்தான் அவருக்கு ராஜ்யசபா சீட்டு தர வேண்டிய நிலை வரும்,” எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “நடிகர்களில் கமல்ஹாசனைப் போல யாரும் இருக்க முடியாது. அவர் கட்சி தொடங்கி வெற்றி பெறவில்லை. ஆனால் பின்னர் திமுக அவருக்கு ராஜ்யசபா சீட்டை வழங்கியது. அதையே அடிப்படையாகக் கொண்டு கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார்,” என விளக்கமளித்தார்.

பின்னர், “ஓரணியில் தமிழ்நாடு” உறுதிமொழி, அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில், கரு.பழனியப்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பிக்கப்பட்டது.

Exit mobile version