சென்னை:
மின் கட்டண வசூல் உள்ளிட்ட பல தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். “தமிழகத்தில் நாளையே சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், அதை எதிர்கொள்ள பாஜக முழுமையாக தயாராக உள்ளது. மக்கள் ஆதரவு யார் பக்கம் இருக்கிறது என்பதே முக்கியம்” என்று அவர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுகளில் சொத்து வரி உள்ளிட்ட பல வரிகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், மாநிலத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக குறிப்பிட்டார். “10 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர் வரை யாரும் பாதுகாப்பாக சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட போதும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என குற்றம் சாட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தையும் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “இத்தகைய சம்பவங்கள் நடந்த பின்னரும் மக்கள் ஆதரவை எப்படி கேட்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதாகவும், அவர் வரும் 23ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும் தெரிவித்தார். “ஜனவரி 9ஆம் தேதி எனது யாத்திரை நிறைவடைகிறது. அந்த நிறைவு விழாவில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்பார்” என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

















