சிவகங்கை :
அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால், தி.மு.க. மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் நடைபெற்ற விடுதலைப்போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர் குருபூஜை விழாவில் அவர் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மருதுபாண்டியர் சகோதரர்கள் சிலைகளுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சிகள் தற்போது தனித்தனியாக செயல்படுகின்றன. இதனால் தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளதால், எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம்” என்று கூறினார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதை பாராட்டத்தக்கது என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 
			















