கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது :
“நவம்பர் 2ஆம் தேதி இரவு, கோவை விமான நிலைய பின்புறம் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த மாணவியை மூவர் தாக்கி கடத்திச் சென்றுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு பின் காயமடைந்த மாணவி தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறியப்பட்ட நிலையில், அதிகாலை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனால் ‘தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு தளர்ந்துவிட்டது. எனது ஆட்சிக்காலத்தில் தமிழகமும், குறிப்பாக சென்னை மற்றும் கோயம்புத்தூரும், பெண்கள் பாதுகாப்பில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தன. ஆனால் தற்போது நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளன,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பெண்கள் தங்கள் பாதுகாப்பை தாமே கவனிக்க வேண்டிய நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இதேபோல், பாட்டாளி மக்கள்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸும் இந்தச் சம்பவத்தை கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “மாணவியை கடத்திச் சென்று கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியூட்டுகிறது. தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
2023-ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2024-ஆம் ஆண்டில் அது 6,975 ஆக உயர்ந்துள்ளது. இது 52 சதவீதம் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இத்தகைய குற்றங்களுக்கு போதைப்பொருள் விற்பனையின் விரிவே முக்கிய காரணம். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பரவலைத் தடுக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும், குற்றவாளிகளை விரைவாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ மற்றும் மனநல ஆலோசனை வழங்கவும் அரசை வலியுறுத்தினார்.
















