வடகிழக்கு பருவமழை பலத்த மழையுடன் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் மது விற்பனை அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “தீபாவளி பண்டிகையையொட்டி சுமார் 789 கோடி ரூபாய்க்கும் மேல் மது விற்பனை நடந்தது என்பது, டாஸ்மாக் மாடல் அரசின் நிஜ முகத்தை வெளிக்காட்டுகிறது. மக்கள் மழை, வெள்ளம், வாழ்க்கை சிரமங்களால் அவதிப்படும் நேரத்தில், அரசு சாராய விற்பனையில் கவனம் செலுத்துவது வெட்கக்கேடானது,” என தெரிவித்தார்.
அதிலும், “வடகிழக்கு மழை தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மது விற்பனை அதிகரித்துள்ளது. இதன் மூலம், அரசு இயந்திரத்தின் வளங்களையும் திமுக அரசு சாராய விற்பனைக்காகவே செலவழித்துள்ளது என்பதே தெளிவாகிறது,” என அவர் விமர்சித்தார்.
மேலும், “மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பல மாவட்டங்களில் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாயப் பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் டாஸ்மாக் கடைகள் மட்டும் எந்தத் தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதுவே திமுக அரசின் நல்லாட்சியா?” என்றும் நயினார் கேள்வி எழுப்பினார்.















