தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. அரசு குப்பைக்கும் வரி போட்டுள்ளது” என குற்றம்சாட்டினார்.
தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், நேற்று மணப்பாறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
அ.தி.மு.க. ஆட்சியில், விவசாயிகள் எந்நேரமும் நீர் இறைக்கும் மோட்டார்களை இயக்குவதற்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது விவசாயிகளுக்கு ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
“இன்று மாநிலம் முழுவதும் ‘கிணற்றை காணோம்’ என்று பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையில் ‘தி.மு.க.வையே காணோம்’ என்று பதாகைகள் வைக்க வேண்டும்,” என அவர் கூறினார்.
அவர் மேலும் தொடர்ந்தது :
தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 67 சதவீதம் உயர்த்தப்பட்டதால், தொழில்சாலைகள் மூடப்படுவதாகவும், இத்தனை உயர்வுக்கு பின் கூட மின் வாரியம் கடன் சுமையில் தத்தளிக்கிறது என்றும், இதற்குக் காரணம் தவறான நிர்வாகம் தான் எனவும் கூறினார்.
குடிநீர், சொத்து வரி மட்டுமல்லாமல், குப்பைக்கும் வரி விதித்து மக்களை வாட்டி வதைக்கும் நிலைக்கு அரசு தள்ளி விட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மாணவர்களை அவமதிப்பதாக பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.
“இதற்காகவா பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதை அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர் உதயநிதி இப்போது போதைக்கு எதிராக உறுதிமொழி எடுக்கச் சொல்கிறார். எல்லோரும் சீரழிந்து விட்ட பின் உறுதிமொழி எடுத்து என்ன பயன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “அ.தி.மு.க. 31 ஆண்டு ஆட்சியில் ஜாதி, மத சண்டைகள் இல்லை. அப்போது தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது,” எனவும் பழனிசாமி வலியுறுத்தினார்.

















