சில நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் போது லாக்-அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு அரசியல் கட்சி தொடங்கியவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்கிறார்கள் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நெல்லையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
அனைத்து தேர்தல்களிலும் வாக்காளர் பட்டியலில் குழப்பம் செய்து வாக்காளர்கள் சிலரை நீக்கம் செய்து , ஒரே இடத்தில் ஐந்தாயிரம் வாக்காளர்களை இணைத்து நியாயத்திற்கு புறம்பாக பாஜக மற்றும் கூட்டணியினர் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள பீகாரிலும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயல்கிறது.
ஒரு திரைப்படம் மக்களுக்கு பல செய்திகளை சொல்லக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சில நடிகர்கள் சினிமாவில் நடிக்கும் போது லாக்-அப் மரணங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு விட்டு அரசியல் கட்சி தொடங்கியவுடன் மக்கள் மேல் அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்கிறார்கள். இது நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. தற்போது லாக் – அப் மரணங்களுக்கு எதிராக பேசி வருகின்றனர்.
மேலும் எங்களின் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் மக்களோடு தமிழக முதலமைச்சர் கூட்டணி அமைக்கிறார். அதுவும் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. என்றார்.