“தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” – மு.க.ஸ்டாலின்

“தி.மு.க.வை அழித்து விடலாம் என்று கனவு காண்பவர்கள் எல்லாம் தவறாக நினைத்துக் கொண்டுள்ளனர்; எந்தக் காலத்திலும் தி.மு.க.வை யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது,” என தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், கட்சியின் போராட்ட வரலாற்றை நினைவுகூர்ந்தார். “நெருக்கடி காலங்களில் ஜனநாயகத்தைக் காப்பாற்றிய கட்சியே தி.மு.க. ஆகும். மிசா சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான தி.மு.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறை சென்றனர். அந்த வேளையில் மிசா ஏழுமலையும் எங்களுடன் சிறையில் இருந்தார்,” என ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் மேலும், “இத்தகைய வரலாறு கொண்ட தி.மு.க.வை இன்று சிலர் அழித்து விடலாம் என நினைப்பது வெறும் மாயை. இந்த கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட முடியாது,” என உறுதியாகக் கூறினார்.

அதே சமயம், தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் (SIR) குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். “இந்த நடவடிக்கை தேர்தல் காலத்தில் பெரிய நெருக்கடியை உருவாக்கும் அபாயம் உள்ளது. இதனை எதிர்த்து அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்,” என்றார்.

நவம்பர் 11ஆம் தேதி தி.மு.க. கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்.க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் கட்சித் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

“எஸ்.ஐ.ஆர். தொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை அறிவாலயத்தில் சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, “கர்நாடகா, ஹரியானா போன்ற மாநிலங்களில் வாக்குத் திருட்டு நடந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதாரத்துடன் கூறி வருகிறார். இத்தகைய நிலை தமிழகத்தில் ஏற்படக் கூடாது,” எனவும், “பூத் லெவல் ஏஜென்ட்கள் விழிப்புடன் இருந்து வாக்காளர் திருத்தப் பணிகளை கண்காணிக்க வேண்டும்,” எனவும் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

Exit mobile version