திருப்பூரில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் மேனாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் தற்போதைய அரசியல் களம் மற்றும் திமுக கூட்டணியின் நிலை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். வரவிருக்கும் தேர்தல் என்பது வெறும் சோதனைக்கான தேர்தல் அல்ல என்றும், தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான காலகட்டம் இது என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இரட்டை நிலப்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சாடிய அவர், காங்கிரஸ் கட்சி ஒரு காலை திமுகவிலும், மற்றொரு காலை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கமும் வைத்திருப்பதாகக் கிண்டல் செய்தார். அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவுடன் கைகோர்த்திருந்தாலும், அவரது பார்வை வேறு திசையில் இருப்பதாகக் குறிப்பிட்ட அண்ணாமலை, திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே அந்த கூட்டணியிலிருந்து எப்போது வெளியேறலாம் என்றுதான் காத்துக் கொண்டிருக்கின்றனர் எனத் தெரிவித்தார்.
அரசியல் என்பது ஒரு திரைப்படத்தின் மூலமாகத் தீர்மானிக்கப்படும் விஷயம் அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தங்கள் வாக்குகளை ‘பிங்கி பிங்கி பாங்கி’ போட்டு விளையாட்டாகத் தீர்மானிக்கக் கூடாது என எச்சரித்தார். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள், அதற்கு மாற்றாக அமரப்போகும் அரசுக்கு நாட்டை ஆளும் தகுதி இருக்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றார். ஆட்சி என்பது வெறும் முதலமைச்சரை மட்டும் சார்ந்தது அல்ல என்றும், அவருடன் இணைந்து செயல்படும் 35 அமைச்சர்கள் மற்றும் 234 தொகுதிகளிலும் வலுவான சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் விளக்கினார். தமிழகம் சரியான பாதையில் செல்லத் தவறினால், அண்டை மாநிலங்களான ஆந்திராவும் கர்நாடகாவும் வளர்ச்சிப் பாதையில் நம்மை முந்திச் சென்றுவிடும் என்ற அபாயத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் செய்யப்பட்டுள்ள தவறுகளைச் சரிசெய்வதற்கே குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, கூட்டத்தைக் காட்டி அரசியல் செய்வதைத் திமுக கைவிட வேண்டும் என்றார். பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், “ஒரு பொருள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதற்கு மரியாதை இருப்பதாகப் பொருள் இல்லை” என்று கூறினார். இந்தியாவில் காகங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், மயில் அதன் சிறப்பம்சத்திற்காகவே தேசியப் பறவையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிய அவர், திமுக பொதுக்கூட்டங்களில் கூடும் கூட்டத்தினால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விமர்சித்தார். தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் தேர்தல் அரசியலில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், பாஜக மட்டுமே முறையான தீர்வை வழங்கும் என்ற தொனியில் அவரது உரை அமைந்திருந்தது.
