திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆட்சித் தலைவர் எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரிப் 2025-2026ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாக 176 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்ற வருகிறது. மேலும் கூடுதலாக 78 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்து செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இக்கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சன்னம் ரகம் 17,394 மெ.டன் பொது ரகம் 6,671 மெ.டன் ஆகக் கூடுதலாக 24,065 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5200 விவசாயிகள் பயன் அடைந்து அதற்கான தொகை ரூ.61 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்கள் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
விவசாயிகளுக்கு நெல் விற்பனை செய்வது தொடர்பாக ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் முதுநிலை மண்டல மேலாளர் திருவாரூர் தொலைபேசி எண் 04366 222542 என்ற எண்ணில் நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன், தெரிவித்துள்ளார்.