தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மாநில அளவிலான திருக்குறள் மாநாடு மற்றும் குறள் வினாடி-வினா போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் தலைமை தாங்கி, தேர்வு செய்யப்பட்டுள்ள 30 வெற்றியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் உயரிய தமிழ் நூல் பரிசுகளை வழங்கித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கடந்த 2024 டிசம்பர் 31 அன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில், தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆண்டுதோறும் ‘குறள் வாரம்’ கொண்டாடப்படும் என அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் ஒரு பகுதியாக இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருக்குறளின் உன்னதக் கருத்துகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் குறளாசிரியர் மாநாடு, திருக்குறள் நாட்டிய நாடகம், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றங்கள் நடத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஜனவரி 20, 2026 அன்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாநில அளவிலான திருக்குறள் மாநாடு மற்றும் வினாடி-வினா போட்டிகள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளன. இப்போட்டிகளுக்கான தேனி மாவட்ட அளவிலான முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த ஜனவரி 9 அன்று உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்தக் கடுமையான போட்டியில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 30 நபர்கள் இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதல் 9 இடங்களைப் பிடித்தவர்கள் தலா 3 பேர் கொண்ட 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாநில அளவிலான வினாடி-வினாப் போட்டியில் தேனி மாவட்டத்தின் சார்பில் களம் காண்கின்றனர். எஞ்சிய 21 சாதனையாளர்கள் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்றுத் தங்களது ஆய்வுக் கருத்துகளைச் சமர்ப்பிக்க உள்ளனர். தேர்வு பெற்றவர்களை வாழ்த்திப் பேசிய ஆட்சியர், அரசுப் பணியில் இருந்துகொண்டு தமிழின் ஆகச்சிறந்த அடையாளமான திருக்குறள் மீதான பற்றுடன் திகழ்வது பாராட்டுக்குரியது எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.கதிர்வேல், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க.பாப்பாலட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
