2,124 வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வழங்குவது மற்றும் பூர்த்தி செய்வது தொடர்பான சிறப்பு முகாம்கள் இன்று (நவம்பர் 15) மற்றும் நாளை (நவம்பர் 16) நடைபெறுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கும் பணி கடந்த 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது.

விநியோக நிலை: இதுவரை 93% படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பணி காலக்கெடு: இப்பணிகள் தொடர்ந்து 04.12.2025 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களைப் பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் வசதிக்காகவும் 15.11.2025 (சனிக்கிழமை) மற்றும் 16.11.2025 (ஞாயிறுக்கிழமை) ஆகிய இரண்டு தினங்கள் சிறப்பு முகாம் (SIR – Special Intensive Revision) நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்த சிறப்பு முகாம் மூலம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வாக்காளர் படிவங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சேகரிக்கும் பணியைத் தீவிரமாக மேற்கொள்வர்.

சிறப்பு முகாம் பணிகளை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு செய்த இடம்: 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியினை அவர் பார்வையிட்டு, பணியின் முன்னேற்றம் மற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் என அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version