செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண் (வயது 27) பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கருவுற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணை, பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தனது கருவை அகற்ற விருப்பம் தெரிவித்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பெற்றோருடன் சென்று மருத்துவ உதவி கோரினார். எனினும், கருவின் வளர்ச்சி ஏற்கனவே 28 வாரங்களை கடந்துவிட்டதால், மருத்துவமனை நிர்வாகம் சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியாது என மறுத்தது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி டி. பரதசக்கரவர்த்தி செவ்வாய்க்கிழமை அன்று விசாரித்தார்.
விசாரணையின் முடிவில் நீதிபதி கூறியதாவது: “சட்டப்படி கருக்கலைப்பதற்கு 24 வாரங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பெண் 80 சதவீத மாற்றுத்திறனாளியாக இருப்பது, அவருடைய உடல்நிலை மற்றும் உளநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மருத்துவக்குழு ஒன்று அமைத்து ஆய்வு செய்து, கருவை கலைக்க அனுமதிக்கலாம். ஆனால், கருவை கலைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டால், அதையும் மனுதாரருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்,” என உத்தரவிட்டார்.
இந்த நீதிமன்ற உத்தரவு, மருத்துவ சட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த சமூக விவாதங்களுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது.