ஜனநாயகத்தின்  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தீவிரப்படுத்தும் நிர்வாகம்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியப்பட்டி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செய்முறைப் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செ. சரவணன்அவர்கள் தொடங்கி வைத்தார்.
அவருடன் நத்தம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. ராஜகுரு மற்றும் நத்தம் வட்டாட்சியர் திரு. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,124 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றிற்காக நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOs) கடந்த 04.11.2025 முதல் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) வழங்கி வருகின்றனர். இதன் மூலம் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், மாற்றங்கள், நீக்கங்கள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் படிவங்கள் பூர்த்தி செய்து மீளப் பெறும் பணிகளும் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இந்த பணிகளில் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் பிரிவு பணியாளர்கள் ஒத்துழைத்து வருகின்றனர்.

 மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் அரசுத் துறையில் பணிபுரியும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் இரு தன்னார்வலர்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் கணக்கெடுப்பு மற்றும் பூர்த்தி பணிகளில் BLOக்களுக்கு நேரடி உதவி வழங்கி வருகின்றனர். இன்றைய செய்முறைப் பயிற்சியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்வது, தரவுகள் சரிபார்ப்பது, புதிய வாக்காளர் விவரங்கள் பதிவு செய்வது, திருத்தங்கள் மற்றும் நீக்கங்கள் செய்வது போன்ற பணிகள் பற்றிய விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் அவர்கள் உரையாற்றுகையில், “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். ஒவ்வொரு வாக்காளரின் பெயரும் சரியாகப் பதிவு செய்யப்படுவது மிக முக்கியம்.

அனைத்து அலுவலர்களும் தங்களது பாகங்களில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு, எந்த தவறும் இன்றி பணியை நிறைவேற்ற வேண்டும்,” என்று வலியுறுத்தினார். பயிற்சியில் நத்தம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். பயிற்சியின் இறுதியில் அலுவலர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு, பூர்த்தி மாதிரிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அலுவலர் செ. சரவணன் அவர்கள் மேலும், “வீடு வீடாகச் சென்று மக்கள் தொடர்பு கொண்டு தகவல் சேகரிப்பது மிகவும் முக்கியமான பணி. வாக்காளர் பட்டியல் நம்பகத்தன்மை உயரும் வகையில் அனைவரும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்,” என்று BLOக்களுக்கு ஊக்கமளித்தார்.

Exit mobile version