
திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். விபத்துக்குப் பின் அவருடன் வந்த மேலும் இருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மூன்று இளைஞர்கள் ஒரு விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கினர். இதில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (எ) பல்லாக்கு என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இடுப்பில் பட்டாக் கத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டவுடன், வாகனத்தில் வந்த மற்ற இரண்டு இளைஞர்களும் கீழே விழுந்து, மேம்பாலத்தின் ஒருபுறத்தில் குதித்துத் தப்பி ஓடிவிட்டனர். நகர் டி.எஸ்.பி. கார்த்திக் தலைமையிலான காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த ஜெயபிரகாஷ் மீது கத்தியைக் காட்டி செல்போன் மற்றும் செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. தப்பி ஓடிய இரண்டு நபர்களையும் திண்டுக்கல் நகர் முழுவதும் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வந்த வாகனம் திருடப்பட்டதுதானா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இளைஞர்களின் அச்சுறுத்தும் நடவடிக்கைகள், போதைப் பொருள் விற்பனை மற்றும் திருட்டு போன்ற குற்றச் செயல்கள் மீண்டும் திண்டுக்கல்லில் அதிகரித்து வருவதைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.