அதிவேக சதத்தால் உலகின் கவனத்தை ஈர்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது வயது மோசடி விவகாரத்தில் சிக்கியிருக்கிறார். கடந்த குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 14 வயது என தெரிவிக்கப்பட்டுள்ள சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை புரிந்தார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர் அடித்த அதிவேக சதமாகும் என்றும், டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் பெயரடைந்தார்.
இந்நிலையில், அவருடைய உண்மையான வயதைப் பற்றிய சந்தேகம் இணையத்தில் விவாதமாகியுள்ளது. பலரும், சூர்யவன்ஷியின் வயது பற்றி கேள்வி எழுப்பியுள்ளதுடன், ஒரு பழைய நேர்காணல் வீடியோவை பகிர்ந்த சிலர், “அவருடைய தோற்றம் 14 வயதுக்கேற்ப இல்லை” எனக் கூறியுள்ளனர். மேலும், “இது 3-4 ஆண்டுகளுக்கு முன் வெளியான வீடியோ” எனவும், அவரே தன்னை சிறியவனாக காட்டியதாகவும் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் தலையிட்டுள்ளார். தனது சமூக ஊடகத்தில், “கிரிக்கெட்டிலும் வீரர்கள் தங்கள் வயதைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ள அவர், வயது மோசடி குறித்து கவலை தெரிவித்து இருக்கிறார். இது, வைபவ் சூர்யவன்ஷியை நெருக்கமாக குறிக்கிறது எனக் கருத்திடுகின்றனர்.
வயது மோசடி, இந்திய விளையாட்டு உலகத்தில் புதியதல்ல. இதற்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) எடுத்து வருகின்றது. இருந்தாலும், இப்போது வைபவ் சூர்யவன்ஷியைச் சுற்றியுள்ள சர்ச்சை, மீண்டும் கவனத்தில் கொண்டுவந்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து BCCI தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.