தோல்விக்கு பின் தோனி சொன்ன வார்த்தை! மும்பையிடம் சரணடைந்த CSK!

MS Dhoni of Chennai Super Kings at tv interview during match 33 of the Tata Indian Premier League between the Kolkata Knight Riders and the Chennai Super Kings held at the Eden Gardens Stadium, Kolkata, on the 23rd April 2023 Photo by: Saikat Das / SPORTZPICS for IPL

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இளம் வீரர் ஷைக் ரசீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 9 பந்துக்கு 5 ரன்கள் அடித்து ரச்சின் ரவீந்திரா வெளியேற, 20 பந்துக்கு 19 ரன்களை அடித்தபிறகு நடையை கட்டினார் ஷைக் ரஷீத்.

இவர்கள் இருவரும் களத்திலிருந்தபோது 4 ரன்ரேட்டாக இருந்த ஆட்டம், மும்பையை சேர்ந்த 17 வயது இளம்வீரரான ஆயுஸ் மாத்ரே களமிறங்கிய பிறகு 8.50ஆக கடகடவென உயர்ந்தது. இறங்கியிதிலிருந்தே சிக்சர் பவுண்டரிகள் என நாலாபுறமும் சிதறடித்த ஆயுஸ் மாத்ரே 213 ஸ்டிரைக்ரேட்டில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டினார். ’யார் சாமி நீ, இவ்வளவு நாள் எங்க இருந்த’ என சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட ‘அவன் பொருள எடுத்து அவனையே போடனும்’ என்பது போல மும்பைக்கு எதிராக மும்பையில் பிறந்த சிறுவனை களமிறக்கிய சென்னை அணி அசத்தியது.

நீண்டநேரம் ஆயுஸ் மாத்ரேவை களத்தில் நிறுத்த அனுமதிக்காத மும்பை அணி அவரை 32 ரன்னில் வெளியேற்றி அசத்தியது. மாத்ரே வெளியேறிய பிறகு மீண்டும் மந்தமான ஆட்டத்திற்கு திரும்பியது சென்னை அணி. துபே மற்றும் ஜடேஜா இருவரும் டொக் வைத்து விளையாட அடுத்த நான்கு ஓவரில் 3, 4, 4, 3 என மிகவும் குறைவான ரன்களையே சேர்த்தது சிஎஸ்கே.

இப்படியே போனா 150 ரன்கள் கூட வராது என சென்னை ரசிகர்கள் புலம்பித்தள்ள, ஒரு கட்டத்திற்கு மேல் அடித்து விளையாட ஆரம்பித்த இருவரும் அரைசதமடித்து அசத்தினர். அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்ட ஷிவம் துபே 32 பந்தில் 50 ரன்கள் அடிக்க, 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விரட்டிய ஜடேஜா 35 பந்தில் 53 ரன்கள் அடித்தார். இருவரின் அரைசதத்தின் உதவியால் 20 ஓவரில் 176 ரன்களை சேர்த்தது சென்னை அணி.

பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 30 ரன்கள் குறைவாக அடித்த சிஎஸ்கே எப்படி வெற்றிபெற போகிறது என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. ஆனால் முதல் ஓவரிலேயே விக்கெட் டேக்கிங் டெலிவரியை வீசிய கலீல் அகமது ரியான் ரிக்கல்டனை பீட்செய்து பந்தை காலில் அடித்தார். சிஎஸ்கே தரப்பிலிருந்து LBW விக்கெட்டிற்கு அப்பீல் செய்தபோதிலும், அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். ஆனால் DRS-க்கு செல்லாத சென்னை அணி தவறுசெய்தது, ரீப்ளேவில் அது அவுட் என தெரியவர சிஎஸ்கே டக்அவுட்டில் விரக்தி தெரிந்தது.

ஒரு குறைவான டோட்டலை அடித்தபிறகு நீங்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுக்கும் செல்லவேண்டும் என்பதை சிஎஸ்கே மறந்துபோனது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ரியான் ரிக்கல்டன் 3 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசியபிறகு வெளியேறினார். ஆனால் அந்த முதல் விக்கெட்டுக்கு பிறகு சிஎஸ்கே பவுலர்களால் மற்றொரு விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை.

2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர். 6 சிக்சர்கள் 4 பவுண்டரிகள் என சிக்சர் மழை பொழிந்த ரோகித் சர்மா 76 ரன்கள் அடிக்க, 5 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் என திரும்பும் பக்கமெல்லாம் வானவேடிக்கை காட்டிய சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 68 ரன்கள் அடித்து மிரட்டினார். டெத் பவுலிங்கிற்கு என்றே பிரத்யேகமாக கடைசி 6 ஓவரில் பந்துவீசிவரும் பதிரான வீசிய 1.4 ஓவரிலேயே 20.40 எகானமியுடன் 34 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமாக வீசினார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஃபார்மிற்கு திரும்பாத அனைத்து வீரர்களும் சென்னையை அடித்து ஃபார்மிற்கு திரும்ப 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது மும்பை அணி. இந்த அசத்தலான வெற்றிக்குபிறகு புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

டோனியின் உணர்ச்சி:

தோல்விக்கு பிறகு வேதனையுடன் பேசிய தோனி அணியில் இருக்கும் மோசமான சூழலை ஒப்புக்கொண்டார். அணியில் எதுவும் சரியாக செல்லாத நிலையில் அதற்காக எமோசன் ஆவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஒருவேளை நாங்கள் தகுதியாக முடியாத சூழல் இருந்தால், அடுத்த சீசனுக்கு சிறந்த லெவனை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்த வேண்டும். 2020 ஐபிஎல் சீசனும் எங்களுக்கு மோசமான சீசனாக இருந்தது, அதிலிருந்து எப்படி வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம். வீரர்களை மாற்றுவதில் அதிகமாக விருப்பம் காட்ட வேண்டியதில்லை, அவர்களின் திறமையை வெளிக்கொண்டுவந்தாலே போதுமானது என்று பேசிய தோனி, சிறப்பாக செயல்பட்ட மும்பை அணியையும், இளம் வீரர் ஆயுஸ் மாத்ரேவையும் பாராட்டினார்.

Exit mobile version