சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக, இரண்டு மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு, மார்கழி மாத பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. தாணிப்பாறையில் குவிந்த பக்தர்கள்: மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென சாரல் மழை பெய்யத் தொடங்கியது. காலை 7:30 மணி வரை மழை நீடித்ததால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் பக்தர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதைக் கண்காணித்த பின்னரே அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டது. 2 மணி நேரத் தாமதம்: நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள், மழை நின்றதைத் தொடர்ந்து காலை 8 மணிக்குப் பிறகு மலையேற அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பக்தர்களின் உடைமைகளைச் சோதனையிட்ட பின் மலையேற அனுமதித்தனர்.
மலையேறிச் சென்ற பக்தர்கள், சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு நடைபெற்ற பிரதோஷ கால சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மழை ஓய்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பக்தர்கள் சிரமமின்றி மலையேறிச் சென்று மாலைக்குள் அடிவாரம் திரும்பினர்.
