தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அறிவித்தது. அதன்படி, ஆட்சிக்கு வந்த பின்னர் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தினார். இதற்காக 1.63 கோடி பெண்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில், 1.06 லட்சம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயர் சூட்டப்பட்டு வழங்கப்பட்டது. பின்னர் இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி சுமார் 1.14 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மேலும் சில தளர்வுகளுடன் 2-வது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறையில் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ கூறியது: இந்தியாவிலேயே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 1,13,75,492 பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக ரூ.30,838 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் ரூ.26,000 செலுத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் மத்திய அரசு பல்வேறு நிதிகளை தராமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் சுமார் 17 லட்சம் மகளிருக்கு இன்றை தினம் உரிமை தொகை வழங்குகிறார். இதில் உரிமை தொகை வேண்டி விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்படுகிறது இதில் தகுதி இருந்தும் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். சிறப்பான இத்திட்டத்துக்கு வித்திட்ட முதலமைச்சர் பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துவதுடன், அவர் மேலும் பல்வேறு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி தமிழகத்தின் வளர்ச்சி அவர் கையில்தான் உள்ளது என்றார்.
