டெல்லி கார் குண்டு வெடிப்பு : மர்மம் சூழ்ந்த உமர் நபியின் 3 மணி நேரம் !

டெல்லி: செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் உமர் நபியின் பின்னணி மற்றும் அவரது சந்தேகமான செயல்பாடுகள் குறித்து பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோயில் பகுதியைச் சேர்ந்தவர் உமர் நபி. 1989 பிப்ரவரி 24ஆம் தேதி நபி பட் – ஷமீமா பானு தம்பதிக்கு பிறந்த இவர், மூன்று சகோதரர்களில் ஒருவர். அவரின் தந்தை ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்; தற்போது ஓய்வு பெற்ற நிலையில், உடல் மற்றும் மன நலக்குறைவால் சிகிச்சையில் இருப்பதாக தகவல்.

மருத்துவ துறையில் சாதனை படைக்க நினைத்த உமர், ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்த பின், அனந்த்நாக் அரசு மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர் டெல்லிக்கு வந்து, ஃபரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் என்ற தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், இதே மருத்துவமனையில் பணியாற்றிய முஜாமில் ஷகில் மற்றும் அதீல் அகமது ஆகியோருடன் அவருக்கு நெருக்கமான உறவு இருந்தது என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஃபரிதாபாத்தில் வெடிமருந்துகள் பதுக்கிய வழக்கில் கைதான முஜாமில் ஷகிலுடன் உமர் நபி தொடர்பில் இருந்ததும், இருவரும் “ஃபரிதாபாத் மாடல்” என்ற பெயரில் பயங்கரவாத கருத்துகளைப் பரப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முஜாமில் கைதானபின், உமர் நபி திடீரென மாயமானார். அதைத்தொடர்ந்து டெல்லி வெடிப்பு நடந்துள்ளதால், இந்த சம்பவத்துடன் அவரின் தொடர்பு குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

புல்வாமாவில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடிப்புக்கு ஒரு நாள் முன், தன் தாயிடம் “நான் நூலகத்தில் இருக்கேன், அடிக்கடி அழைக்காதீங்க” என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, நேற்று மதியம் 3.19 மணி முதல் மாலை 6.22 மணி வரை, உமர் நபி தனது காரை செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தார். அந்த 3 மணி நேரத்தில் அவர் யாரை சந்தித்தார்? அல்லது வெடிப்பு திட்டத்துக்கான கடைசி கட்டத் தயாரிப்பைச் செய்தாரா? என்பது குறித்து தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கின் பின்னணி நாளுக்கு நாள் மர்மம் மிக்கதாக மாறி வருவதால், உமர் நபியின் கடந்த சில வாரச் செயல்பாடுகள் மீது தேசிய பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றன.

Exit mobile version