திருச்சி:
தமிழக முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தை குறிவைத்து அவதூறு பேச்சு ஆற்றியதாக கூறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகியும், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் இந்த புகாரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளார்.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்
முரளி கிருஷ்ணன் தனது மனுவில், கடந்த 20 செப்டம்பர் மதியம் 12 மணியளவில் யூடியூப் மற்றும் பல தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில், விஜய் தமிழக முதலமைச்சரும், அவருடைய குடும்பத்தினரையும் குறித்து கேலியாகவும், அவதூறாகவும், அத்துடன் ஆபாசமாகவும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், கொலை மிரட்டலாக கருதக்கூடிய வகையில் பேச்சுகள் இடம்பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மனுவில், “50 ஆண்டுகளாக எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ள முதலமைச்சர் மீது இவ்வாறு அவதூறு பேசி, பொய்யான தகவல்களை பரப்பி சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயன்றுள்ளார். இதனால் எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து முன்னதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும், நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை நடவடிக்கை
இந்த மனுவை பெற்ற திருச்சி எஸ்.பி., சம்பந்தப்பட்ட ஆவணங்களை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பி மனு ரசீதும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

















