புதுடில்லி: தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராதபோது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் நிலைமை அதிகரித்து வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கவலை தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மவுஷூமி பட்டாச்சார்யா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பெடி ராஜூ என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணை நடைமுறையில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, “ராஜூ மன்னிப்பு கேட்டுள்ளார், அதை தெலுங்கானா நீதிபதி ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி வழக்கை முடித்தார்.
அப்போது தலைமை நீதிபதி கவாய் கூறியதாவது:
“சமீபகாலமாக ஒரு நீதிபதி சாதகமான உத்தரவுகளை வழங்காதபோது, அவரை குறிவைத்து அவதூறு குற்றச்சாட்டுகள் கூறும் நிலை உருவாகி வருகிறது. இது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இத்தகைய நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.”
மேலும் அவர் கூறுகையில், “வழக்கறிஞர்கள் நீதிமன்ற அதிகாரிகளாக இருப்பதால், அவர்கள் நீதிமன்றத்தின் மரியாதையை காக்கும் கடமை உள்ளவர்கள். சட்டத்தின் மகத்துவம் தண்டனையில் அல்ல, மன்னிப்பில் உள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளான நீதிபதி மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால், மேலதிக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது. ஆனால் எதிர்காலத்தில் வழக்கறிஞர்கள் இத்தகைய கருத்துகளை தெரிவிக்கும் முன் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
ஏஐ மற்றும் மார்பிங் வீடியோ விவகாரம்
இதற்கிடையில், இந்திய நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை தலைமை நீதிபதி கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
விசாரணையின் போது, வழக்கறிஞர், “நீதிமன்றங்களிலும் ஏஐ பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வு தேவை,” என கூறினார். இதற்கு தலைமை நீதிபதி கவாய்,
“அது குறித்து நாங்களும் அறிவோம். எங்களைப் பற்றிய மார்பிங் வீடியோ கூட ஆன்லைனில் வந்ததை நாங்களும் பார்த்தோம்,” என கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.
















