கொலை மிரட்டல் – பாதுகாப்பு கேட்டு நடிகை கௌதமி மனு

நடிகை கௌதமி, தனக்கு எதிராக கிடைக்கும் மிரட்டல்களின் அடிப்படையில் போலீசாரிடம் பாதுகாப்பு கோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ஒரு மனுவை சமர்ப்பித்தார்.

இந்த மனுவில், “அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துக்களை அபகரித்துள்ளதாக முன்பே நான் அளித்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். இதேபோல், நீலாங்கரையில் உள்ள ரூ.9.90 கோடி மதிப்புள்ள சொத்தும் அபகரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அந்த நிலத்தில் தற்போது சட்டவிரோதமாக மாநகராட்சி கட்டட அனுமதியையும், மின்சார இணைப்பையும் பெற்று கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில், என் புகாரையடுத்து அந்த கட்டுமானம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. ஆனால் பின்னர் அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிப்பதற்காக அதிகாரிகள் ரூ.96,000 கேட்டனர்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, வாட்ஸ்-ஆப் குழுக்களில் ‘வழக்கறிஞர்கள்’ என தங்களை அடையாளம் கூறும் சிலர், அவரை மிரட்டும் வகையில் செய்திகள் அனுப்பி வருவதாகவும், மே 15ஆம் தேதி ‘சட்ட உதவி சங்கம்’ என்ற பெயரில் நீலாங்கரை காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் போஸ்டர்கள் மூலம் மிரட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

“எனது பாதுகாப்பிற்காக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை மிரட்டும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,” என மனுவில் நடிகை கௌதமி வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version