தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் நிலையில், சில நேரங்களில் 55 கிலோ மீட்டர் வேகத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 22ஆம் தேதி வரை மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெப்பநிலை குறித்து வெளியிடப்பட்ட தகவலில், இன்றும் நாளையும் குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிதான மாற்றம் இருக்காது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் சில பகுதிகளில் வரும் 18 முதல் 20ஆம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடல் நிலை மோசமாக இருக்கும் என்பதால், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
