கரூர் தவெக கூட்ட நெரிசல் : ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் போலீஸ் !

கரூர்:
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தவெக தேர்தல் பிரச்சாரப் பொறுப்பாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு பின்னர் நீக்கியது தொடர்பாகவும் தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், கரூர் காவல்துறையினர் நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றனர். கரூர் அசம்பாவிதம் தொடர்பான முக்கிய ஆதாரங்கள் அவரது குழுவிடம் இருப்பதாக கருதப்படுகிறது.

கட்சித் தரப்பில் இருந்து நிகழ்ச்சியின் முழு வீடியோ, ட்ரோன் காட்சிகள், கேமரா பதிவு, விஜய் பயணித்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் ஆகியவை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை விசாரணைக்காக ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி காவல்துறையினர் கடிதம் வழங்கியுள்ளனர்.

இந்த ஆதாரங்கள் கைப்பற்றப்பட்ட பிறகு, கூட்ட நெரிசல் ஏற்பட்ட சூழ்நிலை குறித்து தெளிவான விவரங்களை அறிய முடியும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version